பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி
பப்புவா நியூ கினியா நாட்டு மக்களிடம் இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு செல்வதற்காக, டோக் பிசின் மொழியில் 'திருக்குறளை' பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பப்புவா நியூ கினியா நாட்டிற்கு நேற்று முதன் முறையாக சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரான ஜேம்ஸ் மராப்பேயுடன் சேர்ந்து இன்று(மே 22) 'திருக்குறளை' வெளியிட்டார். ஒரு இந்திய பிரதமர் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தியாவிற்கும், 14 பசிபிக் தீவு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒரு முக்கிய உச்சி மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டை மராபேவுடன் இணைந்து பிரதமர் மோடி தொகுத்து வழங்கினார். டோக் பிசின் என்பது பப்புவா நியூ கினியாவின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.
பல சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடி திருக்குறளை போற்றி புகழ்ந்துள்ளார்
"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே ஆகியோர் பப்புவா நியூ கினியாவின் டோக் பிசின் மொழியில் தமிழ் கிளாசிக் 'திருக்குறள்' மொழிபெயர்ப்பை வெளியிட்டனர்" என்று வெளியுறவு அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் சுபா சசீந்திரன் மற்றும் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் ஆகியோர் இணைந்து திருக்குறளை டோக் பிசின் மொழிக்கு மொழிபெயர்த்துள்ளனர். "பப்புவா நியூ கினியாவில், பிரதமர் ஜேம்ஸ் மாரப்பேவும் நானும் டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்டோம். திருக்குறள் என்பது பல்வேறு விஷயங்களில் மதிப்புமிக்க அறிவுரைகளை வழங்கும் ஒரு சிறந்த படைப்பாகும்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இதற்கு முன், பிரதமர் மோடி தனது தாய் மொழியான குஜராத்தியில் திருக்குறளை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.