Loading...
ஆபரேஷன் சிந்தூர் மோதலுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர்
ஆபரேஷன் சிந்தூர் மோதலுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர்

ஆபரேஷன் சிந்தூர் மோதலுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2026
07:46 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புரானா கிலாவில் வரும் நவம்பர் 20 முதல் 22 ஆம் தேதி வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) முதலாவது நாகரீக உரையாடல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த பிராந்திய மாநாட்டில் பாகிஸ்தான் சார்பில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக் கலந்துகொள்வார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை (நவம்பர் 14) அறிவித்துள்ளது. எஸ்சிஓ கட்டமைப்பிற்குள் நாகரீக சமூககங்களுக்கு இடையிலான உரையாடலையும் மக்கள் தொடர்பையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

3 ஆண்டுகள்

2023 கோவா பயணத்திற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து நிகழும் அரிய வருகை

கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்துகொண்டார்.

அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் மத்திய அமைச்சர்கள் எவரும் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.

தற்போது 10 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் அமைச்சர் டெல்லி வருவது சர்வதேச இராஜதந்திர வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர்

2025 பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் மோதலுக்குப் பிந்தைய திருப்பம்

கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக மே 7 ஆம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கி எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்களை அழித்தது.

நான்கு நாட்கள் நீடித்த ஏவுகணை மற்றும் டிரோன் மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு பிறகு நடைபெறும் முதல் உயர்மட்ட வருகை இதுவாகும்.

ADVERTISEMENT

தலைமைப் பொறுப்பு

2027 எஸ்சிஓ தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள பாகிஸ்தானின் ராஜதந்திர நகர்வு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள போதிலும், எஸ்சிஓ போன்ற பல்தரப்பு பிராந்திய அமைப்புகளில் இரு நாடுகளும் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன.

குறிப்பாக 2026-27 காலகட்டத்திற்கான எஸ்சிஓ தலைமைப் பொறுப்பைப் பாகிஸ்தான் ஏற்றுள்ள நிலையில், 2027-ல் அந்நாட்டில் நடைபெறவுள்ள தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாகவே டெல்லியில் நடைபெறும் நாகரிக உரையாடல் மாநாட்டில் பாகிஸ்தான் அமைச்சர் பங்கேற்க முடிவு செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT