வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று பாகிஸ்தானில் பொது தேர்தல்
செய்தி முன்னோட்டம்
பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் தீவிரவாதத் தாக்குதல்கள், அண்டை நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானின் பாராளுமன்ற ஜனநாயக முறைப்படி, தேசிய சட்டமன்றம் மற்றும் மாகாண சட்டமன்றங்களில் உள்ள இடங்களுக்கு ஒரே நேரத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்காளர்கள், தங்கள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள் - ஒன்று கூட்டாட்சி மற்றும் மற்றொன்று மாகாணம்.
128 மில்லியன் பாகிஸ்தானியர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குச் சாவடிகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் எனவும், எனினும் விதிவிலக்கான தனிப்பட்ட சூழ்நிலைகளில், இந்த நேரத்தை நீட்டிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல்
நவாஸ் ஷெரீப் கட்சி முன்னிலை என கணிப்பு
மத்திய சட்டமன்றத்திற்கு 5,121 வேட்பாளர்களும், மாகாணங்களுக்கு 12,695 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் நான்கு முக்கிய போட்டியாளர்களை செய்திகள் குறிப்பிடுகின்றன- ராணுவ தளபதி அசிம் முனீர், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப் மற்றும் இளம் வேட்பாளர் பிலாவல் பூட்டோ சர்தாரி.
தேர்தல் முன்னோட்டத்தில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தனிப்பெரும் கட்சியாகவும், பிலாவல் பூட்டோ-சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் மற்றும் பிற கட்சிகளும் உருவாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, நவாஸ் ஷெரீப்பின் PML-N 115 முதல் 132 தேசிய சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என தெரிகிறது.