பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானில் உள்ள "பயங்கரவாத மறைவிடங்கள்" மீது பாகிஸ்தான் 2 நாட்களுக்கு முன் தாக்குதல்களை நடத்தியது. இதனால், அந்நாடுகளின் உறவுகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், அந்த பிரச்சனை இரு தரப்பு பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று பாகிஸ்தானின் தற்காலிகப் பிரதமர் கூறியுள்ளார். மேலும், தனது நாடு அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக அண்டை நாடுகளுடன் நட்பான கூட்டுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தானின் தற்காலிகப் பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானும் ஈரானும் சகோதர நாடுகள் என்றும், அவை வரலாற்று ரீதியாக மரியாதை மற்றும் பாசத்தால் எழுப்பப்பட்ட உறவுகளை பேணி வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நடந்த உயர்மட்ட சிவில்-இராணுவ கூட்டம்
நேற்று பாகிஸ்தானின் உயர்மட்ட சிவில்-இராணுவ கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஈரானுடனான பதட்டங்களை ராஜதந்திர பேச்சு வார்த்தை மூலம் சமாளிக்க முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் அன்வார்ல் ஹக் கக்கர் அந்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்(NSC) கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் சேவைத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டததுடன், ஈரான் நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் இராணுவத்தை அதிகாரிகள் பாராட்டினர். சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு முக்கியமான தளங்களை ஈரான் தாக்கியது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான்-ஈரானுக்கு இடையே பிரச்சனைகள் உருவாகின.