இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருகிறார் என்று NDTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார். அதற்கு பிறகு, பாகிஸ்தான் தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். மே 4-5ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சர்தாரி கலந்து கொள்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்றால் என்ன?
SCO என்பது ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு குழுவாகும். இந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் கோவாவில் நடைபெறும். ஜூன் 9, 2017 அன்று இந்தியா SCOவின் முழு உறுப்பினரானது. எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. உலகின் மொத்த மக்கள்தொகையில் 42 சதவீதத்தையும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தையும் இந்த அமைப்பை கொண்டுள்ளது.