Loading...
இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு போன்ற சூழல்: செப்டம்பர் 27 PTI பேரணியை ஒட்டி நெடுஞ்சாலைகள் மூடல், ராணுவம் குவிப்பு
PTI கட்சி வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது

இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு போன்ற சூழல்: செப்டம்பர் 27 PTI பேரணியை ஒட்டி நெடுஞ்சாலைகள் மூடல், ராணுவம் குவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2026
04:50 pm

செய்தி முன்னோட்டம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலை மற்றும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், கைபர் பக்துன்க்வா பகுதியிலிருந்து இஸ்லாமாபாத்தை இணைக்கும் பிரதான சாலைகள் செப்டம்பர் 23 இரவு முதல் காலவரையின்றி மூடப்படுகின்றன.

கட்டுப்பாடு

முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் மோட்டார்வேக்கள் அடைப்பு

இஸ்லாமாபாத் சுங்கச்சாவடி முதல் சாச் (Chach) இன்டர்சேஞ்ச் வரையிலான அனைத்துப் போக்குவரத்துக்கும் இரு வழிகளிலும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹக்லா, பிண்டி கேப், தௌத் கேல் உட்பட முக்கிய இன்டர்சேஞ்ச்கள் அனைத்தும் மூடப்படும்.

அட்டோக் குர்த் பகுதியில் இருவழி போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் இடையேயான M-2 பாதை மட்டும் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் குவிப்பு

2,000-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் மற்றும் 30,000 வீரர்கள் குவிப்பு

தலைநகரின் அதிமுக்கியமான 'ரெட் ஜோன்' பகுதியை அடைக்க மட்டும் சுமார் 350 கன்டெய்னர்கள் உள்பட நகரம் முழுவதிலும் 2,000-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட கப்பல் கன்டெய்னர்கள் மணல் நிரப்பப்பட்டு வீதிகளில் அடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் இருந்து கூடுதல் காவலர்கள் அழைக்கப்பட்டு, அட்டோக் எல்லையில் மட்டும் 30,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் தங்குவதற்குப் பள்ளிக் கட்டடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதாலும், பதற்றமான சூழல் நிலவுவதாலும் இஸ்லாமாபாத்தில் உள்ள சுமார் 24 கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வகுப்புகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பதற்றம்

அரசின் எச்சரிக்கை மற்றும் அரசியல் பதற்றம்

பிடிஐ கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைய ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், எக்காரணம் கொண்டும் பேரணியை முன்னெடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பேரணிக்கு சில நாட்களுக்கு முன்பே இம்ரான் கானின் சகோதரிகள் கைது செய்யப்பட்டது இரு தரப்பிற்கும் இடையேயான அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT