
ஆப்கானிஸ்தானின் மீது நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; பதிலடி தரப்படும் என தாலிபான்கள் சபதம்
செய்தி முன்னோட்டம்
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த "ஒருதலைப்பட்ச" வான்வழித் தாக்குதலை தாலிபான்கள் கண்டித்து, பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
தாலிபான்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் பாகிஸ்தானின் எல்லையில் உள்ள பக்திகா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.
தாக்குதலில் ஒரு பயிற்சி நிலையம் தகர்க்கப்பட்டது மற்றும் சில பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிய ஊடக அறிக்கைகளின்படி, தாக்குதல்கள் ஏழு கிராமங்களை இலக்காக கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டது.
கண்டனம்
பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கண்டனம் எழுப்பிய தலிபான் அரசு
தாலிபானின் பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலைக் கண்டித்தது.
அவர்கள் பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், பலியானவர்களில் பெரும்பாலானோர் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த அகதிகள் என்றும் கூறியது.
"ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் இது அனைத்து சர்வதேச கொள்கைகளுக்கும் அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கும் எதிரான ஒரு மிருகத்தனமான செயலாக கருதுகிறது மற்றும் அதை கடுமையாக கண்டிக்கிறது" என்று ஆப்கானிஸ்தானின் அமைச்சகம் கூறியது.
வான்வழித் தாக்குதல்களை "கோழைத்தனமான செயல்" என்று கூறிய அமைச்சகம், பாகிஸ்தானின் "ஒருதலைப்பட்ச வான்வழித் தாக்குதல்கள்" எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வாகாது என்றும் கூறியது.
தாக்குதல்
பாகிஸ்தானில் தொடரும் தீவிரவாத தாக்குதல்
ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தானின் சிறப்புப் பிரதிநிதி முகமது சாதிக், காபூலில் தலிபான் தலைமையை சந்தித்து உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடந்தன.
தாலிபான் அல்லது தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்(TTP) ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தனது நாட்டின் மீது தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் அடிக்கடி கூறுகிறது.
நவம்பர் 2022 முதல், TTP, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் காவல்துறை மீதான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.
சமீபத்திய மாதங்களில், தீவிரவாத குழு பாகிஸ்தான் நாட்டிற்குள் நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் பாகிஸ்தான் படைகள் மீதான கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் எல்லைப் பகுதிகளில் உள்ள TTP முகாம் மீது பாகிஸ்தான் விமானப்படை ஜெட்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.