பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி
பப்புவா நியூ கினியா நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் புதையுண்டதாக பப்புவா நியூ கினியா தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. "நிலச்சரிவு 2,000 க்கும் மேற்பட்ட மக்களை உயிருடன் புதைத்தது. மேலும், கட்டிடங்கள் மற்றும் உணவு தோட்டங்களும் புதையுண்டன. இது நாட்டின் பொருளாதார வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது" என்று தேசிய பேரிடர் மையத்தின் அதிகாரி ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார். முதலில் 100 பேர் மட்டுமே இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்பட்டது. இன்று வரை ஐந்து உடல்கள் மற்றும் ஆறாவது பாதிக்கப்பட்டவரின் ஒரு கால் மட்டுமே மீட்கப்பட்டன.
பலி எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்வு
ஆனால், பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு நேற்று கூறியது. 150க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்துள்ளன என்று உள்ளூர் அதிகாரிகள் கணித்துள்ளதை அடுத்து, பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாம் என்று ஐ.நா குடியேற்ற அமைப்பின் தலைவரான செர்ஹான் அக்டோப்ராக் நேற்று தெரிவித்தார். "தற்போது 670 க்கும் மேற்பட்டோர் மண்ணுக்கு அடியில் புதைந்திருப்பதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்" என்று அக்டோப்ராக் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் நேற்று கூறினார்.