போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை
ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போரில் புதிய அணி உருவாவதை, காஸா பகுதியில் இஸ்ரேலின் செயல்பாடுகள் தான் தீர்மானிக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பின் நீண்டகால ஆதரவாளரான ஈரான், லெபனான் நாட்டின் மற்றொரு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாஹ் அமைப்பையும் ஆதரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தொடுத்த தாக்குதலுக்கு பின்னால் ஈரான் உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அதை அந்நாட்டு அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. அதே சமயம் அமெரிக்காவும், ஹமாஸ் தாக்குதலுக்கு ஈரான் உதவியதற்கான ஆதாரங்கள் இல்லை என தகவல் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈராக் பிரதமரை சந்தித்த ஈரான் வெளியுறவு துறை அமைச்சர்
ஈராக் பிரதமர், முகமது ஷியா அல்-சூடானியுடன், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் சந்தித்தபோது, "சில நாட்டின் அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு, இந்த போரில் இஸ்ரேலுக்கு எதிரான புதிய அணி உருவாவது குறித்து கேட்கிறார்கள்". "அவர்களிடம் நாங்கள் அதற்கான சாத்திய கூறுகள் அனைத்தும், காஸாவில் சியோனிச ஆட்சியின் நடவடிக்கைகளில் உள்ளது எனக் கூறி வருகிறோம்" "இப்போதும் கூட, இஸ்ரேலின் இந்த குற்றங்கள் தொடர்ந்தால், இந்த பகுதியில் இருக்கும் எந்த நாடும், எங்களிடம் புதிய அணி உருவாவதற்கு அனுமதி கேட்காது" என அவர் பேசியதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத ஈரான், இஸ்ரேல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து 'சியோனிச ஆட்சி' என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.