ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது
வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் தரையிறங்கி இருக்கலாம் என்று இன்று(பிப் 18) ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். "வட கொரியா ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை, ஹொக்கைடோவுக்கு மேற்கே ஜப்பானின் EEZ பகுதியில் விழுந்ததாகத் தெரிகிறது" என்று கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக, ஜப்பானின் துணை பாதுகாப்பு அமைச்சர் தோஷிரோ இனோ, ஏவுகணை ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோவில் உள்ள ஓஷிமா தீவுக்கு மேற்கே சுமார் 200 கிலோமீட்டர் (125 மைல்) தொலைவில் மாலை 6:27 மணியளவில்(0927 GMT) தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். கிஷிடா, "பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்கவும், பாதுகாப்பு நிலைமையை முழுமையாகச் சரிபார்க்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக" கூறினார்.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் வட கொரியா
மேலும், இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) என சந்தேகிக்கப்படுவதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வட கொரியா "ஒரு ICBM வகை பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கிழக்கு நோக்கி வீசியது. அது சுமார் 66 நிமிடங்கள் பறந்தது" என்று தலைமை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹிரோகாசு மாட்சுனோ செய்தியாளர்களிடம் கூறினார். வட கொரியாவின் வளர்ந்து வரும் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தென் கொரியாவும் அமெரிக்காவும் வருடாந்திர இராணுவப் பயிற்சிகளுக்குத் தயாராகி வரும் நிலையில், இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.