தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க்
நியூயார்க் நகரில் தீபாவளிக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தொடர்ந்து, நியூயார்க் நகரமும் தீபாவளியை அதிகாரப்பூர்வ பள்ளி விடுமுறையாக அறிவித்திருக்கிறது. இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஆயிரக்கணக்கான நியூயார்க்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். மேலும், இது நியூயார்க் நகரத்தில் வசிக்கும் இந்திய சமூகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதற்கான மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் இதை சட்டமாக மாற்றுவதற்கு கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரூக்ளின்-குயின்ஸ் டேக்கு பதிலாக தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது
இது உள்ளூர் குடும்பங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். "தீபாவளியை பள்ளி விடுமுறையாக்கும் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் ராஜ்குமார் மற்றும் பிற சமூகத் தலைவர்களுடன் சேர்ந்து போராடியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வருட தீபாவளிக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்றாலும், தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என்று மேயர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தீபாவளி விடுமுறை மசோதாவில் கவர்னர் கேத்தி ஹோச்சுல் கையெழுத்திடுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மேயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை கவர்னர் கேத்தி ஹோச்சுல் சட்டமாக இயற்றியதற்கு பிறகு, நியூயார்க் பள்ளி காலெண்டர்களில் "புரூக்ளின்-குயின்ஸ் டே" க்கு பதிலாக தீபாவளி விடுமுறை தினமாக மாற்றப்பட இருக்கிறது.