தீபாவளியை விடுமுறை நாளாக அங்கீகரிக்க இருக்கும் நியூயார்க் நகரம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. பென்சில்வேனியாவை தொடர்ந்து, நியூயார்க் நகரமும் தீபாவளியை அதிகாரப்பூர்வ பள்ளி விடுமுறையாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் இதை சட்டமாக மாற்றுவதற்கு கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்த ஜெனிபர் ராஜ்குமார், "நமக்கு கடைசியாக வெற்றி கிடைத்துவிட்டது. தெற்காசிய சமூகத்தின் பல தசாப்த கால போராட்டம் முடிவடைந்தது." என்று பதிவிட்டுள்ளார். ஜெனிபர் ராஜ்குமார், நியூயார்க் மாநில அலுவலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசியப் பெண்மணியும், முதல் இந்து அமெரிக்கருமாவார். தற்போதைக்கு, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் மட்டுமே தீபாவளி விடுமுறை தினமாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் 11 நாட்கள் மட்டுமே கூட்டாட்சி விடுமுறையாகும்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. நியூயார்க் நகரத்தில் நிறைவேற்றப்பட உள்ள இந்த சட்டம் நியூயார்க் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இது அமெரிக்காவின் தேசிய விடுமுறையாக கருதப்படாது. தீபாவளியை தேசிய விடுமுறையாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் பெண்மணியான கிரேஸ் மெங் கடந்த மே மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவில் தீபாவளி 12வது கூட்டாட்சி(தேசிய) விடுமுறையாக அறிவிக்கப்படும். அமெரிக்காவில் 11 நாட்கள் மட்டுமே கூட்டாட்சி விடுமுறையாக கருதப்படுகிறது. இந்த 11 நாட்களில் கிறிஸ்துமஸ் மட்டுமே மத வழிபாட்டிற்கான விடுமுறையாகும்.