நேபாளத்தில் இரண்டு நாட்கள் இடைவிடாத கனமழை; 192 பேர் பலியான சோகம்
நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது. மேலும், 30 பேரைக் காணவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தி, நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. தொடர் மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் குறைந்தது 192 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரழிவில் நாடு முழுவதும் மேலும் 94 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளனர். தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரிஷிராம் திவாரி தெரிவித்துள்ளார்.
வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ள நேபாளம்
நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 4,500 பேரிடர் பாதிக்கப்பட்ட நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உணவு மற்றும் பிற அவசரகால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், தலைநகர் காத்மாண்டுவிற்கு செல்லும் அனைத்து வழிகளும் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். போக்குவரத்தை மீண்டும் தொடங்க தடையாக உள்ள நெடுஞ்சாலைகளை சரி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக திவாரி கூறினார்.
நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட காரணம்
காத்மாண்டுவின் முக்கிய நதியான பாக்மதி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பெரிய பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததைத் தொடர்ந்து அபாய அளவை தாண்டி பாய்கிறது. வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவை கடுமையான மழைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் ஆசியா முழுவதும் மழைப்பொழிவின் அளவையும் நேரத்தையும் மாற்றும் அதே வேளையில், வெள்ளத்தின் தாக்கம் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நீர் தேக்கம் மற்றும் வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத கட்டுமானம் காரணமாக பொதுவாக வெள்ள பாதிப்புகள் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.