ரஷ்ய விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் நிறுத்தம்
ரஷ்யா: மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையம் மீது இரண்டு 'உக்ரைன்' ட்ரோன்கள் தாக்கியதால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் இரண்டு அலுவலக கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தலைநகரின் வ்னுகோவோ விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும் தரை இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன." என்று ரஷ்ய ஊடங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. "மாஸ்கோவில் நடந்த இரவு நேர உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் இரண்டு அலுவலக கட்டிடங்கள் சேதமடைந்தன. இரண்டு அலுவலக கோபுரங்களின் முகப்புகள் சிறிதளவு சேதமடைந்தன. இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை/காயமடையவில்லை" என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய எல்லையில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவில் மாஸ்கோ அமைந்திருக்கிறது
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி என்று கூறிய ரஷ்யா, ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இரண்டு ட்ரோன்கள் மின்னணு இயந்திரங்கள் மூலம் ஒடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. "ஒரு உக்ரேனிய ட்ரோன் மாஸ்கோ பிராந்தியத்தின் ஓடிண்ட்சோவோ மாவட்டத்தில் வான் பாதுகாப்பு படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மின்னணு இயந்திரங்களால் ஒடுக்கப்பட்ட மேலும் இரண்டு ட்ரோன்கள், கட்டுப்பாட்டை இழந்து, மாஸ்கோ-நகரின் குடியிருப்பு அல்லாத அலுவலக பகுதியில் மோதியது." என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரேனிய எல்லையில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவில் மாஸ்கோ அமைந்திருப்பதால், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மிக அரிதாகவே குறிவைக்கப்படுகிறது. எனினும், இந்த வருடம் தொடங்கியதில் இருந்து சில ட்ரோன் தாக்குதல் மாஸ்கோவிலும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.