பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு
மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகப்பட்டு பிரான்ஸ் சுற்றி வளைத்த விமானத்தில் இருந்த, 303 இந்தியர்களில் சிலர் அந்நாட்டிலேயே புகலிடத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் இருந்து நேற்று அமெரிக்காவின் நிகரகுவாவிற்கு சென்ற விமானத்தில் மனித கடத்தல் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக வெட்ரி விமான நிலையத்தில்(பாரிஸிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்) தரையிறக்கினர். பின்னர், விமானம் சுத்தி வளைக்கப்பட்டு அதிலிருந்து இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. பயணிகளை ஏற்றிச் சென்ற ரோமானிய சார்ட்டர் நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸ், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என அதன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அந்த விமானத்தில், 11 துணையில்லாத சிறார்கள் உள்ளிட்ட பல குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் புகழிடத்திற்கு விண்ணப்பம்
பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில பயணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அரோர் ஓபிர்சல், துணையில்லாத சிறார்களில் 6 பேர் மற்றும் 10 இந்தியர்கள் புகலிடம் கோரி விண்ணப்பிக்க விரும்புவதாக ஏஎஃப்பி இடம் தெரிவித்தார். அமெரிக்க அல்லது கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு, பயணிகள் மத்திய அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை விசாரணைக்காக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் காவல் மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள், வெட்ரி விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அவர்களை சந்திக்க வெளி ஆட்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
பிரான்ஸ் சட்டம் என்ன சொல்கிறது?
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை பிரெஞ்சு நீதிமன்றத்தில் விசாரிக்க இன்று பட்டியலிடப்பட்டுள்ளது. விமானத்தில் உள்ள பயணிகளை மேலும் எட்டு நாட்களுக்கு தடுத்து வைக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் மனித கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விமானம் சுற்றி வளைக்கப்பட்டது. அது நிரூபிக்கப்படும் பட்சத்தில், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்நிலையில், அனைத்து குழு உறுப்பினர்களும் விசாரணைக்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர், பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படும் தெரிவித்துள்ளார்.