பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் மைதானத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை போலீஸார் நேற்று(மே 2) கைது செய்தனர். நேற்று இரவு 7:00 மணியளவில்(1800 GMT) ஆயுதம் ஏந்திய அந்த நபர் கைது செய்யப்பட்டார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பதற்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில், உலகளாவிய அரச குடும்பங்களும் உலகத் தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நபர் வைத்திருந்த சந்தேகத்திற்கிடமான பையை போலீஸ் அதிகாரிகள் வெடி பொருளை பயன்படுத்தி வெடிக்க செய்தனர் என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது
எனினும், தற்போதைக்கு இந்த சம்பவத்தை தீவிரவாத கோணத்தில் இருந்து பார்க்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். "அதிகாரிகள் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தினர், அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று மெட் போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் ஜோசப் மெக்டொனால்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவோ, பொதுமக்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவோ எந்த புகாரும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. பாதுகாப்பிற்காக அதிகாரிகள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த போது சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் அரண்மனையில் இல்லை என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.