இனி விசா இல்லாமல் மலேசியா செல்ல முடியாது: 2027 ஜனவரி 1 முதல் இந்தியர்களுக்கான விசா விலக்கு சலுகை ரத்து
செய்தி முன்னோட்டம்
இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா விலக்குச் சலுகையை வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் திரும்பப் பெறுவதாக மலேசிய குடிவரவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பின்படி, 2027 ஜனவரி 1 முதல் மலேசியாவிற்கு பயணம் செய்யும் அனைத்து இந்தியக் குடிமக்களும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே செல்லுபடியாகும் விசாவை பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மலேசியாவிற்கு சுற்றுலா அல்லது வர்த்தகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள், டிசம்பர் 1 முதல் 'MyVISA' தளம் வழியாக முன்கூட்டியே விசாவிற்கு விண்ணப்பித்து பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விசா விதிமுறைகள்
மலேசிய குடிவரவுத் துறை வெளியிட்டுள்ள புதிய விசா விதிமுறைகள்
இந்திய பயணிகளுக்கான புதிய விசா நடைமுறைகள் குறித்து மலேசிய குடிவரவுத் துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ 'MyVISA' இணையதளம் வழியாக இந்தியர்கள் புதிய விதிமுறைகளுடன் கூடிய மலேசிய விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
சமர்ப்பிக்கப்பட்டு 7 வேலைநாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்கள் தானாகவே காலாவதியாகிவிடும்.
கடந்த அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதி, செப்டம்பர் 1-க்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உட்பட அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.
ஒருமுறை விண்ணப்பம் காலாவதியாகிவிட்டால், புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
விசா விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும் அல்லது நிராகரிக்கப்பட்டாலும், செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டணம் எக்காரணம் கொண்டும் திரும்பத் தரப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.