Page Loader
கிழக்கு இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கிழக்கு இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுதியவர் Sindhuja SM
Apr 09, 2024
05:58 pm

செய்தி முன்னோட்டம்

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள ஹல்மஹேரா தீவில் GMT 0948 மணிக்கு சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்கள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. மொலுக்கா கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் "சுனாமி அச்சுறுத்தல் இல்லை" என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா

பிந்தைய அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை 

ஆனால், இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம்(BMKG) அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பிந்தைய அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்டமாகும். பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" மீது அது அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது. "ரிங் ஆஃப் ஃபயர்" என்னும் தீவிர நில அதிர்வு வளைவு, ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் நீண்டுள்ளது. ஜனவரி 2021 இல் சுலவேசி தீவை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 100 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று, ஆயிரக்கணக்கானோரை வீடற்றவர்களாக மாற்றியது.