Page Loader
லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்
மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்

லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2024
11:07 am

செய்தி முன்னோட்டம்

லெபனான் முழுவதும் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்ததை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்தன. கொல்லப்பட்டவர்களில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 25 பேர் அடங்குவர். பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸின் முக்கிய கூட்டாளியான ஹிஸ்புல்லா அக்டோபர் 7 முதல் காஸாவின் மோதலில் ஈடுபட்டு வருகிறது. இது பிராந்தியத்தில் ஒரு முழுமையான போரை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை அதிகரித்த நிலையில், வியாழனன்று (செப்டம்பர் 19) இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் நூற்றுக்கணக்கான இலக்குகளை தாக்கியதாக அறிவித்தது.

பழிவாங்கும் உறுதிமொழி

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் சபதம்

இஸ்ரேல் நடத்திய இந்த இந்தத் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர் பீப்பாய்களை அழித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் சுமார் 100 ஏவுகணைகள் மற்றும் கூடுதல் பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னோடியில்லாத பின்னடைவைச் சந்தித்ததாக ஹிஸ்புல்லா தலைவர் ஒப்புக்கொண்டார். தாக்குதல்களுக்குப் பின்னர் தனது முதல் பொது உரையில், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள அதன் உறுப்பினர்களுக்கு எதிரான பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதல்கள் எல்லா சிவப்புக் கோடுகளையும் கடந்துவிட்டதாக ஹிஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா அறிவித்தார். தனது குழு பதிலடி கொடுக்கும் என்றும், இஸ்ரேலுக்கு எதிரான போரில் தயங்காமல் இருக்கும் என்றும் அவர் சபதம் செய்தார்.

தொடர்ந்து மோதல்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை

லெபனான் பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தனது நாட்டின் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் தெரிவித்துள்ளார். "போரின் புதிய கட்டத்தில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் குறிப்பிடத்தக்க அபாயங்களும் உள்ளன. ஹிஸ்புல்லா துன்புறுத்தப்படுவதாக உணர்கிறது. எங்கள் இராணுவ நடவடிக்கை தொடரும்." என்று காலண்ட் ஒரு அறிக்கையில் கூறினார். லெபனானில் பேஜர்கள் வெடிப்பதற்கு முன்னர், இஸ்ரேல் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினிடம் ஒரு திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கையைப் பற்றித் தெரிவித்ததாக அமெரிக்கா கூறியது. ஆனால், குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை எனத் தெரிகிறது. புதனன்று வாக்கி-டாக்கி ரேடியோக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது அலை தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவிடம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.