
வெள்ள நிவாரண நிதியை பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்; பகீர் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மீண்டும் கட்டி வருகிறது. பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்க, பாகிஸ்தான் அரசின் நிதியைப் பயன்படுத்துவதாகவும், வெள்ள நிவாரணத்திற்காக வழங்கப்படும் தொகையை இந்த அமைப்பு திசை திருப்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தாக்குதலில் முழுமையாகச் சேதமடைந்த இந்தக் கட்டடங்களை இடிக்கும் பணி ஆகஸ்ட் 18 அன்று தொடங்கியது. பல கனரக வாகனங்களைப் பயன்படுத்தி, மார்க்கஸ் தொய்பா வளாகம் செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் முழுமையாக இடிக்கப்பட்டது. இதன் சிதைவுகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
நிதி
பாகிஸ்தான் அரசு நிதி வழங்குவதாக உறுதி
பாகிஸ்தான் அரசு, லஷ்கர்-இ-தொய்பா போன்ற அரசு ஆதரவு பயங்கரவாத குழுக்களின் சேதமடைந்த மையங்களைச் சீரமைக்க நிதி அளிப்பதாக உறுதியளித்தது. அதன்படி, மார்க்கஸ் தொய்பாவை மீண்டும் கட்ட, ஆகஸ்ட் 14 அன்று அந்நாட்டு அரசிடம் இருந்து 4 கோடி பாகிஸ்தான் ரூபாய் உதவியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. நிதியுதவிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, லஷ்கர்-இ-தொய்பா வெள்ள நிவாரணம் என்ற பெயரில் நிதி திரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிதி திரட்டல் பொதுவெளியில் நிவாரணப் பணிகளுக்கு என்று சொல்லப்பட்டாலும், அவை உண்மையில் பயங்கரவாத மையங்களின் மறுகட்டமைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் போதும் இதே போன்ற நிதி திரட்டலை லஷ்கர்-இ-தொய்பா மேற்கொண்டது. அப்போது திரட்டப்பட்ட நிதியில் 80% பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.