Page Loader
குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம் 

குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம் 

எழுதியவர் Sindhuja SM
Jun 19, 2024
10:57 am

செய்தி முன்னோட்டம்

குவைத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் USD 15,000(சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்க உள்ளது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி, தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் பகுதியில் இருக்கும் ஏழு மாடி கட்டிடத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள காவலர் அறையில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது அந்த கட்டிடத்தில் 196 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர்.

குவைத்

இழப்பீட்டு தொகை தூதரகங்களுக்கு அனுப்பப்படும்

இந்நிலையில், குவைத் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகைகள் செயலாக்கப்பட்டு, உயிரிழந்தவர்களுடைய நாட்டை சேர்ந்த அந்தந்த தூதரகங்களுக்கு அனுப்பப்படும் என்று குவைத் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட தூதரகங்கள் உறுதி செய்யும் என்றும், அந்த குடும்பங்களுக்கு உடனடியாக உதவிகள் சென்றடைவதும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டான காலங்களில் உயிரிழந்த குடும்பங்களை ஆதரிப்பதற்காக இந்த இழப்பீடு வழங்கப்பட உள்ளது. கடந்த ஜூன் 13ஆம் தேதி, உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய விமானப்படையின் விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு அந்த உடல்கள் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.