LOADING...
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்; பசிபிக் பிராந்தியம் முழுவதும் அலெர்ட்
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்

ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்; பசிபிக் பிராந்தியம் முழுவதும் அலெர்ட்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 30, 2025
08:30 am

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை (ஜூலை 30) ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 4 மீட்டர் உயரத்திற்கு சுனாமி ஏற்பட்டது மற்றும் பசிபிக் பிராந்தியம் முழுவதும் கடலோரத்தில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளபட்டது. 1952 க்குப் பிறகு இப்பகுதியில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றான இந்த நிலநடுக்கம், கம்சட்காவில் கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இந்த நிலநடுக்கம் 19.3 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது மற்றும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு தென்கிழக்கே சுமார் 119 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

பின்னதிர்வு

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள்

8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே 6.9 ரிக்டர் அளவிலான வலுவான பின்னதிர்வு ஏற்பட்டது. செவெரோ-குரில்ஸ்க் துறைமுகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் ரஷ்ய அவசர உதவி அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. கம்சட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் நிலைமையின் தீவிரத்தை உறுதிப்படுத்தினார், அதே நேரத்தில் பிராந்திய அதிகாரிகள் கரையோரங்களில் இருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தினர். பீதியால் தூண்டப்பட்ட விபத்துகள் முதல் கட்டிடங்களுக்குள் ஏற்படும் காயங்கள் வரை சம்பவங்கள் நடந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுனாமி 

சுனாமி எச்சரிக்கை

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பிராந்தியங்கள் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. 2011 சுனாமி பேரழிவால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட ஜப்பானின் கிழக்கு கடற்கரை, பல கடலோரப் பகுதிகளுக்கு மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் ஹவாயிலும், தாழ்வான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். சுனாமியால் மோசமான அலைகள் ஏற்படக்கூடும் என்று அவர்கள் எச்சரித்தனர். அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு ரஷ்யா, ஈக்வடார், ஜப்பான், சிலி, ஹவாய் மற்றும் சாலமன் தீவுகளின் சில பகுதிகளில் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் தாக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியது. அதிகாரிகள் தொடர்ந்து அதிர்வுகளை கண்காணித்து வருகின்றனர்.