126 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த வெப்பநிலை; ஜப்பானுக்கு இப்படியொரு நிலைமையா?
1898இல் வெப்பநிலை பதிவு செய்தல் தொடங்கியதில் இருந்து, கடந்த அக்டோபர் மாதத்தில், ஜப்பான் உச்சபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் (ஜேஎம்ஏ) தரவு காட்டுகிறது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) வெளியிடப்பட்ட ஜேஎம்ஏ தரவுகளின்படி, ஜப்பான் முழுவதும் மாதாந்திர சராசரி வெப்பநிலை வழக்கமான அக்டோபர் வெப்பநிலையை விட 2.21 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. பிராந்திய ரீதியாக, வடக்கு ஜப்பானில் வெப்பநிலை சராசரியாக 1.9 டிகிரி அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு ஜப்பானில் வெப்பநிலை 2.6 டிகிரி அதிகரித்துள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பரிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என ஜேஎம்ஏ கணிப்பு
கியோட்டோ, நாகானோ மற்றும் மத்திய டோக்கியோ போன்ற நகரங்கள் குறிப்பிடத்தக்க வெப்பநிலை உயர்வை சந்தித்தன. இங்கு சராசரி முறையே 3.2 டிகிரி, 3.1 டிகிரி மற்றும் 2.6 டிகிரி உயர்ந்துள்ளது. அடுத்த வாரத்தின் பிற்பகுதியில் குளிர்ந்த காற்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நவம்பர் மாத வெப்பநிலையும் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று ஜேஎம்ஏ கணித்துள்ளது. இது மேலும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும். ஜப்பானில் அதிக வெப்பநிலையின் முறை ஜூலை முதல் தொடர்ந்து உள்ளது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பாலைவனமாக சகாராவில் வெள்ளம் ஏற்பட்ட செய்தி வந்துள்ள நிலையில், மறுபுறம் ஜப்பானில் வரலாறு காணாத வெப்பநிலை அதிகரிப்பு பருவநிலை மாற்றம் குறித்த ஆபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.