'ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் கேள்வி கேட்கிறது?' பாகிஸ்தான் நிருபருக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த நெத்தியடி பதில்
செய்தி முன்னோட்டம்
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 81வது பொதுக் கூட்டத்தின் இடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்பொழுது குறுக்கிட்ட பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், பயங்கரவாதத்திற்கு இந்தியா எப்போது ஆதரவு அளிப்பதை நிறுத்தும் எனக் கேள்வி எழுப்ப முயன்றார். அதற்கு உடனடிப் பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர், "ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது? போதும் நிறுத்துங்கள்" என்று மிகக் காரசாரமாகத் தெரிவித்து அவரது வாயை அடைத்தார்.
பயங்கரவாதம்
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் தீர்க்கமான நிலைப்பாடு
பாகிஸ்தான் தனது நாட்டில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்குப் புகலிடம் அளிப்பதாகக் குற்றம் சாட்டிய இந்தியா, எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான நடவடிக்கைகளை இஸ்லாமாபாத் எடுக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி வான்வழித் தாக்குதலை நடத்தி அழித்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தடை
பஹல்காம் தாக்குதல் மற்றும் சர்வதேச அளவில் டிஆர்எஃப் அமைப்புக்குத் தடை
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பை பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பு என இந்தியா அடையாளம் காட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் டிஆர்எஃப் அமைப்பைப் பன்னாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை விதித்தது.
மேலும் ஐநா பாதுகாப்பு சபையின் தடைகள் குழு அறிக்கையிலும் பஹல்காம் தாக்குதலில் இந்த அமைப்பின் தொடர்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைக் கட்டுப்படுத்தப் பாகிஸ்தான் தவறி வருவதாக இந்தியா சர்வதேச அரங்கில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
எஃப்ஏடிஎஃப் கண்காணிப்பு
எஃப்ஏடிஎஃப் கண்காணிப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பிரச்சாரம்
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கத் தவறியதால், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் பல ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்பட்டது என்று இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத்தை ஒரு சாதாரண அரசியல் பிரச்சனையாகக் கருதக்கூடாது என்றும், அதற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் சர்வதேச அரங்குகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.