ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி
சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' முன்முயற்சியில்(BRI) இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சீனப் பிரீமியர் லி கியாங்கிடம் தெரிவித்துள்ளார். ஜி20 மாநாட்டின் போது நடந்த இத்தாலி-சீனா இரு தரப்பு பேச்சு வார்த்தையின் போது அவர் இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜி20 மாநாட்டிற்காக டெல்லி வந்திருந்த இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நேற்று சீனப் பிரீமியர் லி கியாங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். இந்த பேச்சு வார்த்தையின் போது, சீனாவின் புகழ்பெற்ற பல பில்லியன் டாலர் முன்முயற்சியான 'பெல்ட் அண்ட் ரோடு' குறித்து பிரீமியர் லி கியாங்கிடம் பேசிய அவர், BRIஐ விட்டு வெளியேறுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.
சீனாவுடன் நல்ல நட்புறவைப் பேண விரும்பும் இத்தாலி
இந்த முன்முயற்சியினால் இத்தாலிக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். மேலும், இந்த முன்முயற்சியில் இருந்து இத்தாலி விலகினாலும் சீனாவுடன் இத்தாலி நல்ல நட்புறவைப் பேண விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 2019 இல் இத்தாலி அதிகாரப்பூர்வமாக சீனாவின் BRI ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 'பெல்ட் அண்ட் ரோடு' முன்முயற்சி என்பது உலகத்தை சீனாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் வழித்தடங்களை அமைக்கும் திட்டமாகும். இதனால், உலகத்துடனான சீனாவின் வர்த்தகம் அதிகரிக்கும் என்று சீனா கருதுகிறது. இதே போன்று இந்தியாவை உலக நாடுகளுடன் இணைக்கும் வழித்தடத்திற்கான திட்டத்தை நேற்று ஜி20 மாநாட்டின் போது பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.