ரஃபா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இடம்பெயர்ந்தோர் கூடாரங்கள் தாக்கப்பட்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில், இடம்பெயர்ந்தோர் வசிக்கும் தெற்கு காசா பகுதி நகரமான ரஃபாவில், குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
15 நாட்களுக்கு முன்பு இஸ்ரேலியப் படைகள் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய பின்னர், நகரின் கிழக்குப் பகுதிகளிலிருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான மக்கள் ரஃபாவில் தற்காலிக கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த கூடாரங்களில் தற்போது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார மற்றும் சிவில் அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால், இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் இறுதி எண்ணிக்கையை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
இஸ்ரேல்- ஹமாஸ் போர்
ஹமாஸை குறி வைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கியதற்கு அமெரிக்காவே பொறுப்பு என்று கூறி, ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர், இந்த தாக்குதலை 'படுகொலை' என்று அழைத்தார்.
"ரஃபாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள், ஹமாஸ் இன்னும் செயல்படும் ஒவ்வொரு இடத்திலும் (இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்) செயல்படும் என்பதை நிரூபிக்கிறது" என்று இஸ்ரேலிய போர் அமைச்சரவை மந்திரி பென்னி காண்ட்ஸ் கூறினார்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 36,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலைத் தாக்கிய பின்னர் காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.
கடந்த சில மாதங்களாக, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை சர்வதேச சமூகம் கண்டித்தும், கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தி வருகிறது.