டெல் அவிவ் நகரை நோக்கி பாய்ந்த ஃபிளைதுபாய் விமானம்; சுட்டு வீழ்த்தத் தயரான இஸ்ரேல் போர் விமானங்கள்
செய்தி முன்னோட்டம்
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ஃபிளைதுபாய் FZ1073 விமானத்தில், உதவி விமானி ஹமாம் அல்-ஹம்மாமி என்பவர் விமான கேப்டன் ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்தி விமானத்தைக் கடத்த முயன்ற சம்பவத்தின் பின்னணியில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விமானம் இஸ்ரேல் எல்லைக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, அதனை சுட்டு வீழ்த்த இஸ்ரேலிய போர் விமானங்கள் தயாராக இருந்ததாக சிபிஎஸ் நியூஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
16,000 அடி சரிவும் இஸ்ரேலின் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கையும்
செப்டம்பர் 30 அன்று நடந்த இச்சம்பவத்தின் போது, உதவி விமானி திடீரென தாக்குதல் நடத்தியதால் விமானம் வெறும் 30 விநாடிகளில் சுமார் 16,000 அடி உயரத்திலிருந்து வேகமாகக் கீழே சரிந்தது.
இதனால் இது தீவிரவாதத் தாக்குதலாகவோ அல்லது விமானக் கடத்தலாகவோ இருக்கலாம் என இஸ்ரேல் அஞ்சியது.
இஸ்ரேலிய வான்படை விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயன்றும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
உடனடியாக அவசரநிலைக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, இஸ்ரேலிய வான்வெளி முழுமையாக மூடப்பட்டது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் உடனடியாக வான்நோக்கிப் பாய்ந்தன.
முடிவு
பிரதமர் இறுதி முடிவு
விமானம் தொடர்ந்து டெல் அவிவ் நகரை நோக்கி வந்திருந்தால், போர் விமானங்கள் விமானத்தின் அருகே சென்று காக்பிட் பகுதிக்குள் இருப்பவர்களை நேரடியாக பார்த்து நிலைமையை ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
கடத்தல் உறுதி செய்யப்பட்டு தாக்குதல் நடத்தியவர் பதிலளிக்காத பட்சத்தில், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தும் இறுதி அதிகாரத்தை இஸ்ரேல் பிரதமருக்கு வழங்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
பென் குரியன் விமான நிலையம் அல்லது அஸ்ரியேலி மையம் போன்ற முக்கிய இடங்கள் மீதான தாக்குதலை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சவுதி
சவுதிக்கு திருப்பப்பட்ட விமானம்
எனினும், விமானம் சவுதி அரேபியாவை நோக்கித் தனது பாதையை மாற்றியதை தொடர்ந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் திரும்ப அழைக்கப்பட்டன.
அதேசமயம் சவுதி அரேபியாவும் தனது போர் விமானங்களை வான்வெளியில் ரோந்துக்காக ஏவியது.
காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறந்ததால், பயணிகள் உள்ளே நுழைந்து உதவி விமானியைக் கட்டுப்படுத்தினர்.
பின்னர் விமானத்தில் பயணம் செய்த இரு ஓய்வுபெற்ற விமானிகளின் உதவியுடன், விமானம் சவுதி அரேபியாவின் தபூக் (Tabuk) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.