துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல்
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் கண்டித்ததற்கு எதிர்வினையாக, துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன், "துருக்கியில் இருந்து வெளிவரும் கடுமையான அறிக்கையை கருத்தில் கொண்டு, இஸ்ரேல்- துருக்கி உறவுகளை மறுமதிப்பீடு செய்ய, நான் தூதர்களை வெளியேற உத்தரவிடுகிறேன்" என பதிவிட்டு இருந்தார். இவ்விருநாடுகளும் கடந்த வருடம் தான் தூதர்களை நியமித்துக் கொண்டனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் முறிந்து போன இருநாட்டு உறவுகளை மீட்டு எடுக்கும் முயற்சிக்கு, இஸ்ரேலின் இந்த அறிவிப்பு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
தூதர்களை வெளியேற உத்தரவிட்ட எலி கோஹன்
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராடிய துருக்கி அதிபர்
பாலஸ்தீனர்களின் நீண்ட கால ஆதரவாளரான அதிபர் எர்டோகன், நேற்று இஸ்தான்புலில் அவர் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த பாலஸ்தீன் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றார். இதில் பேசியவர், "இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளர்" என்றும், பாலஸ்தீனர்களை "ஒழிக்க" நினைக்கும், "போர் குற்றவாளி" எனவும் பேசினார். மேலும் அவர். "ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னை தற்காத்துக்கொள்ள நிச்சயமாக உரிமை உண்டு" "ஆனால் இந்த விவகாரத்தில் நீதி எங்கே? நீதி இல்லை- காஸாவில் ஒரு கொடூரமான படுகொலை நடக்கிறது" என பேசினார். மேலும் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது, நிதானம் காத்த எர்டோகன், இஸ்ரேல் பதில் தாக்குதலில் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.