ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல்
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் மீது எதிர் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தனது பழிவாங்கும் திட்டத்தை இறுதி செய்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான சரியான நேரம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் விளைவாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டம் உட்பட பல பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) Jake Sullivan,"ஈரானிய அரசாங்கத்தின் தீங்கிழைக்கும் மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கத் தயங்காது" என்றார்.
ஈரான் மீது தடை விதிக்கும் அமெரிக்கா
"வரவிருக்கும் நாட்களில், அமெரிக்கா அதன் ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டம் உட்பட ஈரானைக் குறிவைத்து புதிய தடைகளை விதிக்கும். அத்துடன் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை மற்றும் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தை ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்கும்" என்று அவர் செவ்வாயன்று கூறினார். "ஈரானின் இராணுவத் திறன் மற்றும் செயல்திறனைக் கட்டுப்படுத்துவது, சிதைப்பது மற்றும் அதன் முழு அளவிலான சிக்கலான நடத்தைகளை எதிர்கொள்வது போன்றவற்றிற்காக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்" என்று அவர் கூறினார். இஸ்ரேல் தாக்குதலை அடுத்து ஈரான் மீது அமெரிக்காவின் கூட்டாளிகள் மற்றும் பங்காளிகள் தங்கள் சொந்த பொருளாதாரத் தடைகளை விரைவில் பின்பற்றுவார்கள் என்று வாஷிங்டன் நம்புவதாக அமெரிக்க NSA ஜேக் சல்லிவன் மேலும் கூறினார்.