பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பால் பிணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி, வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசிவருகின்றனர். தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானமாக பாதுகாப்பு மற்றும் வெகுமதி வழங்கப்படும் என அதில் எழுதப்பட்டுள்ளது. "நிம்மதியாக வாழவும், உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால், உடனடியாக மனிதாபிமான செயலைச் செய்து, உங்கள் பகுதியில் உள்ள பிணைக் கைதிகள் பற்றி மதிப்புமிக்க தகவல்களைப் பகிரவும்". "தகவல் கூறுபவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை வழங்க அதிகபட்ச முயற்சி எடுப்போம் என இஸ்ரேலிய இராணுவம் உறுதியளிக்கிறது". "மேலும் நீங்கள் நிதி வெகுமதியைப் பெறுவீர்கள். முழுமையான இரகசியத்தன்மைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்" என அந்தத் துண்டு பிரசுரத்தில் அரபி மொழியில் எழுதப்பட்டிருந்தது.
துண்டுப் பிரசுரங்களை கிழித்தெறியும் பாலத்தின் மக்கள்
இஸ்ரேல் ராணுவம் வீசிய துண்டு பிரசுரங்களை, காசா மக்கள் கிழித்தெறிவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "நாங்கள் கவலைப்படவில்லை, நீங்கள் [இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு] என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்," "காசாவில் உள்ள நாங்கள் அனைவரும் உங்களிடம் சொல்கிறோம், நாங்கள் உங்களை எதிர்க்கிறோம். காசாவில் கிழக்கிலிருந்து மேற்கு வரை உங்களை எதிர்க்கிறோம்" எனக் கூறிய ஒருவர் துண்டு பிரசுரங்களை கிழித்ததாகவும், அதன் அருகில் பலர் கைதட்டியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. "நாங்கள் இந்த பாதுகாப்பற்ற இடத்தில் தங்குமிடம், குடிநீர், உணவு இல்லாமல் இருந்து வருகிறோம். ஆனால் நாங்கள் இங்கேயே இருப்போம்." "கடவுள் விரும்பும் வெற்றி வரை நாங்கள் இங்கேயே இருப்போம்" என துண்டு பிரசுரத்தை கிழித்த, அபு ரமதான் பேசியதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.