தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை
தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான இஸ்லாமிய அரசு(IS) தான் நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா(KP) மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கர் என்ற நகரில் பழமைவாத கட்சியான ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) கட்சியின் ஒரு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட JUI-F கட்சியினர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு(IS) என்னும் பயங்கவாத குழுதான் காரணம் என்று பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்று சந்தேக நபர்கள் கைது
"பஜாவுர் குண்டுவெடிப்பு குறித்து நாங்கள் விசாரித்து தகவல்களை சேகரித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட டேஷ்(இஸ்லாமிய அரசு -IS) அமைப்புக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் குழுவினர் சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்து வரும் நிலையில், தற்கொலைப் படைத் தீவிரவாதியின் விவரங்களைச் சேகரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரி நசீர் கான் தெரிவித்துள்ளார். இந்த குடுவெடிப்பில் 10 கிலோகிராம் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக KP காவல்துறை இன்ஸ்பெக்டர் அக்தர் ஹயாத் கான் தெரிவித்துள்ளார்.