
பாகிஸ்தானில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் முகமது அசிம் மாலிக் நியமனம்
செய்தி முன்னோட்டம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தற்போதைய தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக்கை நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ) நியமித்துள்ளது.
பாகிஸ்தானின் வரலாற்றில் ஐஎஸ்ஐ தலைவர் ஒருவர் ஒரே நேரத்தில் என்எஸ்ஏ பதவியை வகிப்பது இதுவே முதல் முறையாகும்.
முகமது அசிம் மாலிக் உடனடியாக என்எஸ்ஏவின் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்பதை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 2024 இல் ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரலாக ஆன மாலிக், முன்னர் பாகிஸ்தான் இராணுவத்தின் பொது தலைமையகத்தில் துணை ஜெனரலாக பணியாற்றினார்.
ராணுவ தளபதி
ராணுவ தளபதியின் நம்பிக்கையைப் பெற்ற மாலிக்
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீருடனான அவரது நெருங்கிய தொடர்பும், பாகிஸ்தானின் ராணுவ ஸ்தாபனத்திற்குள் அவரது வலுவான நிலைப்பாடும் இந்த இரட்டை நியமனத்திற்குப் பின்னால் முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன.
லெப்டினன்ட் ஜெனரல் மாலிக் பாகிஸ்தானின் பத்தாவது என்எஸ்ஏ ஆவார். மேலும், அவருக்கு ஏராளமான ராணுவ அனுபவங்கள் உள்ளன. தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தலைமை பயிற்றுவிப்பாளராகவும், பலுசிஸ்தான் மற்றும் வசிரிஸ்தானில் கட்டளைப் பதவிகளிலும் முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் ஃபோர்ட் லீவன்வொர்த் மற்றும் இங்கிலாந்தின் ராயல் பாதுகாப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு 2022இல் நீக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் என்எஸ்ஏ பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.