ஈரானின் தலைவர் கமேனிக்கு பதிலாக அவரது மகன் தேர்வா? யார் அவர்?
இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில், ஈரானில் உள்நாட்டு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வயது 85. அதன் தொடர்ச்சியாக அவரது இரண்டாவது மகன் மொஜ்தாபா கமேனி, ஷியா இஸ்லாமிய தேசத்தை வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, மோஜ்தபா தனது தந்தையின் இறப்பிற்கு முன்பே பொறுப்பேற்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. மேற்கு ஆசியாவின் நிலைமையைப் பொறுத்தவரை இது ஈரானுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி ரகசியமாக தேர்வு செய்யப்பட்டதாக ஈரான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. ஈரான் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புள்ள பாரசீக மொழி ஊடகமான ஈரான் இன்டர்நேஷனல் அறிக்கையை Ynet News மேற்கோள் காட்டியுள்ளது.
மாறும் உள்நாட்டு விவகாரம்
அலி கமேனிக்கு உடல்நிலை சில காலமாக மோசமடைந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ்வுக்காக ஈரானியர்களுக்கு உரையாற்றவும் பிரார்த்தனைகளை நடத்தவும், அவர் பலத்த பாதுகாப்புடன் அக்டோபர்-4 அன்று பொதுவில் தோன்றினார். ஈரான் இன்டர்நேஷனல் தனது அறிக்கையில், அலி கமேனியின் உத்தரவின் பேரில் ஈரானின் நிபுணர்கள் சபையின் 60 உறுப்பினர்களில் செப்டம்பர் 26 அன்று ஒரு திடீர் கூட்டம் கூட்டப்பட்டதாகக் கூறியது. அந்த கூட்டத்தில், அவரது வாரிசை உடனடியாக முடிவெடுக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். "முடிவு மற்றும் செயல்முறை இரண்டிற்கும் ஆரம்ப எதிர்ப்பு இருந்தபோதிலும், தலைவர் மற்றும் அவரது பிரதிநிதிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்து மொஜ்தபாவை வாரிசாக நியமிக்க சட்டமன்றம் ஒருமனதாக உடன்பாட்டை எட்டியது" என்று YNet News தெரிவித்துள்ளது.
யார் இந்த மோஜ்தபா கமேனி?
அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி 1969இல் வடகிழக்கு ஈரானில் உள்ள மஷாத் என்ற இடத்தில் பிறந்தார். அவர் தனது தந்தை மற்றும் பிற முக்கிய அறிஞர்களின் பிரிவின் கீழ் இறையியலைத் தொடர்ந்தார் மற்றும் ஒரு மதகுரு ஆனார். 2005 மற்றும் 2009இல் ஈரானின் தேர்தல்களில், மொஜ்தபா மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் ஆதரவாளராக இருந்தார். மேலும் 2009இல் அவர் வெற்றி பெறுவதற்கும் அவர் துணை நின்றார். அஹ்மதிநெஜாத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜூன் 2009இல் எதிர்ப்புகள் வெடித்தன. அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை அடக்குபவர்களின் பொறுப்பை மொஜ்தபா வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மொஜ்தபா கமேனி அரசின் கருவூலத்தில் இருந்து நிதியை மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியதை அடுத்து, அஹ்மதிநெஜாத் உடனான உறவுகள் மோசமடைந்தன.