அணுக்குண்டு வீசப்பட்டால் தப்பிப்பது எப்படி என ஈரான் திடீரென எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளது
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், அணுஆயுதத் தாக்குதல் அல்லது அணு உலை வெடிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த 8 நிமிட அவசர வழிகாட்டுதல் வீடியோவையும் நெறிமுறைகளையும் ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. ஈரானின் அதிகாரப்பூர்வச் செய்தி நிறுவனமான IRNA, நாட்டின் 'செயலற்ற பாதுகாப்பு வாரத்தை' முன்னிட்டு அக்டோபர் 29 அன்று இந்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. நடான்ஸ் அணு உலை அமைந்துள்ள ஸ்பஹான் மாகாணத்தின் அவசரக்கால மீட்பு அமைப்புகளால் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கியக் குறிப்புகள்
அணு வெடிப்பிலிருந்து தப்பிப்பதற்கான முக்கியக் குறிப்புகள்
ஈரான் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, அணு வெடிப்பு நிகழ்ந்தால் உடனடியாக கட்டிடங்களின் அடித்தளம் அல்லது ஜன்னல்கள் இல்லாத மைய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
வெளிப்புறக் காற்றை உட்செலுத்தும் ஏசி மற்றும் காற்றோட்ட அமைப்புகளை உடனடியாக அணைத்துவிட்டு, கதவு மற்றும் ஜன்னல்களை இறுக்கமாக மூடிவிட வேண்டும்.
கார்கள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பான அடைக்கலம் அல்ல என்பதால், வாகனங்களில் தஞ்சம் அடைவதைத் தவிர்க்க வேண்டும்.
அணு வெடிப்பின் பேரொளியை நேரடியாக பார்க்கக் கூடாது. தரையில் முகம் கீழ்நோக்கிப் படுப்பதுடன், கைகளால் தலையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கதிர்வீச்சு
கதிர்வீச்சுப் புகை ஆபத்து
அணு வெடிப்பினால் உருவாகும் கதிர்வீச்சுத் துகள்கள் காற்றில் கலந்து பல நூறு கிலோமீட்டர்கள் வரை பரவக்கூடும் என்று இஸ்ஃபஹான் செஞ்சிலுவைச் சங்கத்தின் இயக்குநர் எப்ராஹிம் அடெல்சாதே எச்சரித்துள்ளார்.
கதிர்வீச்சுப் புகையில் சிக்கியவர்கள் வெளிப்புற ஆடைகளை கழற்றி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து முத்திரையிட வேண்டும்.
வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப் கொண்டு தோலையும் முடியையும் கழுவ வேண்டும். கண்டிஷனர்கள் பயன்படுத்தாமல் சாதாரண ஷாம்பூ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பாட்டில் குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எச்சரிக்கை
சுய மருத்துவம் கூடாது: தீவிர எச்சரிக்கை
அணுக்கதிர்வீச்சில் இருந்து தப்பிக்க ஐயோடின் மாத்திரைகளை தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என அவசரக்கால சேவை செய்தி தொடர்பாளர் அப்பாஸ் அபேதி எச்சரித்துள்ளார்.
ஐயோடின் மாத்திரைகள் தைராய்டு சுரப்பியை மட்டுமே பாதுகாக்கும் என்றும், பிற கதிர்வீச்சுகளுக்கு பாதுகாப்பு தராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்மின்காந்த அதிர்வலைகளால் போன்கள் செயல்படாமல் போகலாம் என்பதால், அதிகாரப்பூர்வச் செய்திகளை அறிய ரேடியோக்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னணி
அமெரிக்கத் தாக்குதல் அச்சுறுத்தல்
கடந்த 2025 ஜூன் மாதத்தில் இஸ்ரேல்-அமெரிக்க வான்வழித் தாக்குதலின் போது அமைதி காத்த ஈரான், தற்போது இத்தகைய விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
நடான்ஸ் அணு உலைக்கு அருகில் உள்ள பிக்ஏக்ஸ் மலை பகுதியில் அமைந்துள்ள ஈரானின் சுரங்க அணு உலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் மற்றும் செய்திகள் வெளியாகி வரும் பின்னணியில் இந்த வழிகாட்டுதல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.