இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள்
நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து ஈரான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மேற்கத்திய காலனித்துவத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டங்களையும், ஒத்துழையாமை இயக்கத்தை நிறுவிய இந்தியாவின் நிலைப்பாட்டையும் ரைசி நினைவு கூர்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. "காசாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சியோனிச குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்
உடனடியாக போரை நிறுத்துதல், காசாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல் போன்ற உலகளாவிய கூட்டு முயற்சிகளை ஈரான் ஆதரிக்கிறது என்றும் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி கூறியுள்ளார். "பாலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான கொலைகள் உலகின் அனைத்து சுதந்திர நாடுகளையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த கொலையானது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அதிபர் ரைசி தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது, மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை எந்தவொரு மனிதனின் பார்வையில் இருந்தும் "கண்டனத்துக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் மேலும் கூறி இருக்கிறார்.