காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூன் கொலை சதி வழக்கு: இந்தியர் நிகில் குப்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் 19 ஆண்டு சிறை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கூலிப்படையை ஏவிக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில் இந்திய குடிமகன் நிகில் குப்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் 19 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்துள்ளது. நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி விக்டர் மாரெரோ 80 நிமிட விசாரணைக்குப் பிறகு நிகில் குப்தாவுக்கு 235 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தீர்ப்பளித்தார். மேலும் சிறைத் தண்டனை காலம் முடிந்தவுடன் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
நிகில் குப்தா
மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நிகில் குப்தாவும் 24 ஆண்டு சிறை கோரிய அரசுத் தரப்பும்
55 வயதான நிகில் குப்தா கூலிப்படை கொலை, கூலிப்படை கொலைக்கான சதி மற்றும் பணமோசடி சதி ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குப்தாவின் செயல் மிகவும் கொடூரமானது மற்றும் துணிச்சலானது எனக் குறிப்பிட்டு அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குமாறு கோரியிருந்தனர்.
விசாரணையின்போது பேசிய பன்னூன், கொலை மிரட்டல் காரணமாக 1,200 நாட்களுக்கும் மேலாக தனது வழக்கறிஞர் பணியைச் செய்ய முடியவில்லை எனத் தெரிவித்தார்.
அதேசமயம் நிகில் குப்தா நீதிமன்றத்தில் பேசுகையில் மகாத்மா காந்தியின் அகிம்சை வழியிலிருந்து விலகியதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.
பின்னணி
DEA ரகசிய உளவாளியிடம் $1,00,000 பேரம் மற்றும் $15,000 முன்பணம் வழங்கப்பட்ட பின்னணி
நீதிமன்ற ஆவணங்களின்படி கடந்த 2023-ஆம் ஆண்டு விகாஷ் யாதவின் அறிவுறுத்தலின் பேரில் நியூயார்க்கில் பன்னூனைக் கொல்ல நிகில் குப்தா சதித்திட்டம் தீட்டினார்.
கூலிப்படையை ஏற்பாடு செய்ய அவர் அணுகிய நபர் அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ரகசிய உளவாளியாக செயல்பட்டவர் ஆவார்.
பன்னூனைக் கொலை செய்வதற்காக அந்த ரகசிய அதிகாரிக்கு ஒரு லட்சம் டாலர் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டதோடு 2023 ஜூன் 9 அன்று 15,000 டாலர் முன்பணமாக வழங்கப்பட்டது.
இதையடுத்து ஜூன் 30 அன்று செக் குடியரசில் கைது செய்யப்பட்ட குப்தா பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
பயங்கரவாதி
இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு என்ஐஏ தேடும் குற்றவாளியான குர்பத்வந்த் சிங் பன்னூன்
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பின் பொது ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய அரசு இவரைப் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
மேலும் தேசிய புலனாய்வு முகமையின் மிக முக்கியத் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் பன்னூன் இடம்பெற்றுள்ளார்.