பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தா, செக் குடியரசில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின் படி, குற்றம் சாட்டப்பட்ட இந்தியரான நிகில் குப்தா, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில், கூட்டாட்சி நிர்வாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் திங்கள்கிழமை நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், நாடு கடத்துவது தொடர்பாக நிகில் குப்தாவின் மனுவை செக் நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காலிஸ்தான் தீவிரவாதியை கொலை சதியில் இந்திய ஏஜெண்டின் பின்னணி என குற்றசாட்டு
கொலை செய்ய சதியில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நிகில் குப்தா கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி செக் குடியரசில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க வக்கீல்களின் கூற்றுப்படி, இந்திய அரசாங்க அதிகாரியின்(ஏஜென்ட்) வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்க குடிமகனைக் கொல்ல ஒரு கொலைகாரனை வேலைக்கு அமர்த்தும் சதியில் நிகில் குப்தா சிக்கினார். அவருடைய கொலைக்கான இலக்கு பன்னூன் என அடையாளம் காட்டப்பட்டது என அமெரிக்கா கூறியுள்ளது. நிகில் குப்தாவின் நாடுகடத்தல், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் வருடாந்திர ICET உரையாடலுக்காக புது டெல்லிக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக வந்துள்ளது. பன்னூன் கொலைச் சதியில் இந்தியாவுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ள இந்தியா, அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.