Page Loader
அடிப்படை வசதிகள் கூட இல்லாத தனிமைச் சிறையில் முன்னாள் பாக்., பிரதமர் இம்ரான் கான்
அடிப்படை வசதிகள் கூட இல்லாத தனிமைச் சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

அடிப்படை வசதிகள் கூட இல்லாத தனிமைச் சிறையில் முன்னாள் பாக்., பிரதமர் இம்ரான் கான்

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 16, 2023
11:06 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தரீக் இ இன்ஃசாப் அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு, தோஷகானா ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, அட்டாக் சிறையில் இருக்கும் அவரை, அங்கே தனிமைச் சிறையில் வைத்திருப்பதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் இம்ரான் கானின் உதவியாளர் சல்மான் ஹைதர். இம்ரான் கானின் பொருட்களை வைப்பதற்கு கூட இடமில்லாத சிறிய அறையில் அவரை அடைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், இம்ரான் கான் குளிப்பதற்கும், தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் ஒரு வாளி தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

பாகிஸ்தான்

தனிமைச் சிறையில் வாடும் இம்ரான் கான்: 

முன்னாள் பாக் பிரதமர் தனிமைச் சிறையில் இருக்கும் போது யாருடனும் பேசக் கூடாது என, அவருடைய அறைக்கு அருகில் காவலர்கள் யாரையும் நியமிக்கவில்லையாம். இஸ்லாமாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியும், அவருக்கு தேவையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் ஹைதர். ஒரு முன்னாள் பிரதமராக, தினசரி மற்றும் புத்தகங்களை பெறுவது அவருடைய அடிப்படை உரிமை. அதனைக் கூட அவர்கள் செய்ய மறுப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஹைதர். நீதிமன்றத் தீர்ப்புகளின் படி நடக்காமல், இம்ரான் கானின் வழக்கறிஞரைக் கூட அவரை சந்திக்க விடாமல் செய்து வருவதாகத் தெரிவித்திருக்கும் சல்மான் ஹைதர், இது அப்பட்டமான ஒரு சட்ட மற்றும் அரசியலமைப்பு விதிமீறல் எனவும் தெரிவித்துள்ளார்.