அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள்
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆயுதமேந்திய ஆளில்லா படகு வியாழன் அன்று, அமெரிக்க கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களின் இரண்டு மைல் தூரத்திற்கு நெருங்கி சென்று வெடித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதில், பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஹூதிகளின் சமீபத்திய தாக்குதல், அதன் தாக்குதலுக்கு எதிரான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிடப்பட்டதற்கு ஒரு நாளைக்கு பின் நிகழ்ந்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படைக்கு தலைமை தாங்கும் வைஸ் அட்மிரல் பிராட் கூப்பர், வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹூதி வெடிக்கும் படகு சுமார் 80 கி.மீ செங்கடலில் பயணித்த பின்னர் கப்பல் அதிகமாக பாதைகளில் வெடித்ததாக தெரிவித்தார்.
25 வது முறையாக வணிக கப்பல்களை தாக்கிய ஹூதிகள்
ஏமனின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிகள், நவம்பர் 19ஆம் தேதி முதல், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் வர்த்த கப்பல்களை தாக்கி வருகின்றனர். இது வர்த்தக கப்பல்கள் மேல் நடத்தப்படும் 25வது ஹூதி தாக்குதல் ஆகும். ஹூதிகளின் தாக்குதல் உலகில் 12% வர்த்தகம் கடந்து செல்லும் செங்கடல் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால், 10க்கும் மேற்பட்ட கப்பல் நிறுவனங்கள் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து ரத்து செய்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமையில் பல்வேறு நட்பு நாடுகள் இணைந்து வர்த்தக கப்பல்களை பாதுகாக்க பணிக்குழுவை அமைத்தனர். அந்தக் குழு, இதுவரை கிட்டத்தட்ட 100 ஹூதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.