Loading...
செங்கடலில் 14 இந்தியர்களுடன் சென்ற படகு மீது தாக்குதல்: சவுதிதான் காரணம் என ஹூதிகள் குற்றச்சாட்டு
செங்கடலில் 14 இந்தியர்களுடன் சென்ற படகு மீது தாக்குதல்

செங்கடலில் 14 இந்தியர்களுடன் சென்ற படகு மீது தாக்குதல்: சவுதிதான் காரணம் என ஹூதிகள் குற்றச்சாட்டு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
10:30 am

செய்தி முன்னோட்டம்

செங்கடலில் உள்ள ஜபல் ஜுகார் தீவு அருகே 14 இந்தியர்களுடன் சென்ற படகு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாப் அல்-மந்தேப் நீரிணைக்கு அருகே 14 இந்திய மாலுமிகள் பயணித்த படகு தாக்குதலுக்கு உள்ளானதாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குச் சவுதி அரேபியாவே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள ஹூதிகள், பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அதேவேளையில், சவுதி அரேபியா மீதான தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து சவுதி அராம்கோ தனது தலைமையகத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.

சவுதி அராம்கோ

சவுதி அராம்கோ தலைமையகம் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தஹ்ரானில் உள்ள தனது பிரதான தலைமையகத்தைக் காலி செய்துவிட்டு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு சவுதி அராம்கோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ரியாத் மற்றும் மதினா நகருக்கு மேல் வந்த ஹூதிகளின் ட்ரோன்களை சவுதி கூட்டுப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.

கண்டனம்

இந்தியா கடும் கண்டனம்

சவுதி அரேபியாவின் சிவில் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தம்மாம் விமான நிலையத் தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அரசு, காயமடைந்தவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் சவுதியில் தவித்துவந்த 3,000-க்கும் மேற்பட்ட இந்திய உம்ரா புனிதப் பயணிகள் உட்பட 13,000க்கும் அதிகமானோர் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT