சையத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்; தலைவரின் மரணத்தை உறுதி செய்தது ஹிஸ்புல்லா
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை தொடர்ந்து இஸ்ரேல் குறிவைத்து தாக்கி வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவரது மகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு பெய்ரூட்டில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. சையத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம், அவரது மகளின் மரணத்தை உறுதி செய்யவில்லை. ஹிஸ்புல்லா அமைப்பினர் முதலில் இந்த தகவலை மறுத்த நிலையில், சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், லெபனான் மக்களைப் பாதுகாப்பதற்காகவும் இஸ்ரேலுக்கு எதிரான தனது போரைத் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
சையத் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் ஏற்படுத்தும் தாக்கம்
ஹிஸ்புல்லாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான அல்-மனார் தொலைக்காட்சி நஸ்ரல்லாவின் மரணம் பற்றிய அறிவிப்புக்குப் பிறகு குரான் வசனங்களை ஒளிபரப்பத் தொடங்கியது. நஸ்ரல்லா தனது சக தியாகிகளுடன் இணைந்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஹிஸ்புல்லாவை வழிநடத்தினார். அவரது மரணம் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களை வியத்தகு முறையில் மாற்றியமைக்கலாம். இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஹசன் நஸ்ரல்லா இனி உலகை பயமுறுத்த முடியாது" என்று பதிவிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து வரும் காசா போருக்கு இணையாக, தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.