சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 80வது இடத்தைப் பிடித்த இந்தியா
2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது லண்டனைச் சேர்ந்த ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிடுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை நாடுகளுக்கு விசா இன்றிப் பயணிக்கும் முடியும் என்பதன் அடிப்படையில் இந்த சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடுகளின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறது ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜப்பான தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யும் அனுமதியுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது சிங்கப்பூர்.
இந்தியாவிற்கு எந்த இடம்:
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை, 190 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யும் அனுமதியுடன் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. 103 இடங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 57 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யும் அனுமதியுடன் செனகல் மற்றும் டோகோ ஆகிய நாடுகளுடன் 80-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது இந்தியா. இந்தப் பட்டியலில் மிகவும் பலவீனமான பாஸ்போர்ட்டாக 27 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யும் அனுமதியுடன் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது ஆஃப்கானிஸ்தான். ஈராக், சிரியா, பாகிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களைப் பிடித்திருக்கின்றன. பாலஸ்தீன், நேபாள், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் கடைசி பத்து இடங்களில் இடம்பிடித்திருக்கின்றன.