ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்திலும், கோஸ்ட் மாகாணத்தில் உள்ள செபரா மாவட்டத்தின் ஆப்கானிஸ்தான் துபாய் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. துரதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதல்களால் பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்தன. இதன் விளைவாக ஆறுபேர் உயிரிழந்தனர். பலரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன என்று தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாக்டிகாவில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு நபர்கள் உயிரிழந்ததாகவும், கோஸ்டில் ஒரு வீடு இடிந்து விழுந்ததால் இரண்டு பெண்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம்
அப்துல்லா ஷா என்ற ஒருவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், அந்த நபர், சம்பவம் நடந்த போது பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்ததாக ஆப்கானித்தான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் இந்த தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறது என்றும், இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் எல்லைமீறி இருக்கிறது என்றும் ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது, "கடந்த 20 ஆண்டுகளாக மற்றவர்களின் நலனுக்காக சில இராணுவ ஜெனரல்கள் தவறான கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். அவர்களின் சுயநலத்தால், இரு முஸ்லீம் அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவைக் கெடுப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும்" என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.