ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்
ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அடுத்த மாதம் அவர் சந்திக்க இருக்கிறார். மேலும், ரூ. 50,000 கோடி மதிப்பிலான ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் பொறுப்பை இந்தியாவுடன் இணைந்து ஜெர்மனி ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான RFPகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டன. இந்த RFPகளைப் பெற்ற மசாகன் டாக்ஸ் லிமிடெட்(MDL) மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ(L&T) ஆகிய இந்திய நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பதிலளிக்கும் என்று கூறப்படுகிறது. ஜெர்மனி, தென் கொரியா மற்றும் சில நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை பெற முயற்சித்து வருகின்றன.
தற்போது இந்திய கடற்படையிடம் நீர்மூழ்கி கப்பல்கள் குறைவாக இருக்கிறது
ஜூன் 6-ம் தேதி இந்தியா வர இருக்கும் பிஸ்டோரியஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட பல முக்கிய பிரமுகர்களை சந்திக்க இருக்கிறார். நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் மிகப்பெரிய ஒன்றாகும். தற்போது, இந்திய கடற்படையிடம் நீர்மூழ்கி கப்பல்கள் குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஜெர்மனியிடம் இருந்து இந்தியா வாங்கிய HDW நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்னும் கடற்படையின் ஒரு பகுதியாக உள்ளது. கடற்படையின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களும் MDL நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இவை பிரெஞ்சு ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் என்று அழைக்கப்படுகிறது. MDL அல்லது L&T உடன் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் போடப்பட்டால் அது இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கீழ் வரும். இதனால், பாதுகாப்புத்துறைக்கு அதிக முதலீடு கிடைக்கும்.