கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோய் பரவலுக்கு வாய்ப்பு: WHO எச்சரிக்கை
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மீண்டும் எச்சரித்துள்ளார். 'நோய் X' என அழைக்கப்படும் புதிய தொற்றுநோய்க்கு எதிராக உலகளாவிய தயார்நிலையின் அவசரத் தேவையை கடந்த சனிக்கிழமை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது. 'நோய் X' பற்றிய முழு விவரத்தையும் இங்கு காணலாம். இந்த கொடிய தொற்றுநோயை எதிர்கொள்ள மே மாதத்திற்குள் உலக நாடுகள் ஒரு தொற்றுநோய் ஒப்பந்தத்தை எட்டும் என்று நம்புவதாக டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கடந்த சனிக்கிழமை கூறினார்.
தொற்றுநோய்க்கான ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?
இந்நிலையில், திங்கள்கிழமை(ஜனவரி 22) அன்று பேசிய அவர், "மே மாதத்திற்குள் ஒரு தொற்றுநோய்க்கான தயார்நிலை ஒப்பந்ததை நாம் எட்டவில்லை என்றால் எதிர்கால தலைமுறையினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார். கோவிட்-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் 194 உறுப்பு நாடுகள், அடுத்த சுகாதார பேரழிவைச் சமாளிக்க அல்லது அதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் அனைத்து நாடுகளும் தயாராக இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் சர்வதேச உடன்படிக்கையை எட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மே 27அன்று கூட இருக்கும் உலக சுகாதார சபையின் 2024 ஆண்டு கூட்டத்தில் இந்த ஒப்பந்ததிற்கான இறுதி முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த ஒப்பந்தத்திற்கான தேவையை WHO தலைவர் வலியுறுத்தியுள்ளார்.