
அதிகரிக்கும் போராட்டங்களுக்கு இடையே துபாய்க்குத் தப்பிச் செல்லத் திட்டமிடும் நேபாளப் பிரதமர் கே.பி.ஒலி
செய்தி முன்னோட்டம்
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சமூக ஊடக தளங்கள் மீது விதித்த தடை, பெரும் சீற்றத்தினை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்ட பின்னரும், Gen Z தலைமையிலான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், துபாய்க்கு செல்வது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார் என ஊடக செய்திகள் கூறுகின்றன. பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தியா டுடே டிவியிடம் கூறுகையில், மருத்துவ சிகிச்சைக்காக துபாய்க்கு பயணம் செய்வதற்கான விருப்பத்தை ஒலி ஆராய்ந்து வருகிறார். தனியார் விமான நிறுவனமான ஹிமாலயா ஏர்லைன்ஸ், விமான நிலையத்தில் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் தொடர்ந்து அமைச்சரவையை விட்டு ராஜினாமா செய்து வருவதால், ஒலி ஏற்கனவே தனது துணை பிரதமருக்கு பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டம்
சுமூக முடிவை எட்ட அனைத்துக்கட்சி கூட்டம்
இதற்கிடையில், நிலைமையை மதிப்பிட்டு அர்த்தமுள்ள முடிவைக் காண ஒலி இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். "நிலைமையை மதிப்பிட்டு அர்த்தமுள்ள முடிவைக் காண சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அதற்காக, இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளேன். இந்த கடினமான சூழ்நிலையில் அமைதியாக இருக்குமாறு அனைத்து சகோதர சகோதரிகளையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஒலி ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, போராட்டத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இதுவரை மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.