இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது
கிட்டத்தட்ட கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வரும், இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில், திட்டமிட்டபடி நான்கு நாள் போர் நிறுத்தம் தற்போது தொடங்கியது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்திய, ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர், போரை தொடங்கினர். போர் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கும் நிலையில் தற்போது, முதல் முறையாக நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. காசா பகுதிக்குள் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள் செல்லவும், பணய கைதிகள் விடுவிக்கப்படவும், போர் நிறுத்தம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இன்று விடுவிக்கப்படும் 13 பணய கைதிகள்
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது படி, ஹமாஸ் பிடித்து வைத்துள்ள 50 பணய கைதிகளை - அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்கள், இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுவிக்கப்படுவர். அதன்படி இன்று உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு, 13 பணய கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். அதேபோல், இஸ்ரேலும் தனது சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீனர்கள்- பெண்கள் மற்றும் வாலிபர்கள், இன்று முதல் விடுவிக்க சம்மதித்துள்ளது. மேலும் இன்று விடுவிக்கப்பட உள்ள, 39 பாலஸ்தீனர்களின் பெயர்கள், பாலஸ்தீன அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிவாரண பொருட்களுடன் காசாவிற்குள் நுழைந்த வாகனங்கள்
போர் நிறுத்தம் தொடங்கியவுடன் நிவாரண பொருட்கள் அடங்கிய மூன்று லாரிகள், எகிப்தின் ரஃபா எல்லை வழியாக காசா பகுதிக்குள் நுழைந்தன. போர் தொடங்கியதற்கு பின்னர், காசாவிற்கு செல்லும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் துண்டித்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டுக்கு பின்னர், அக்டோபர் 21 ஆம் தேதி முதல், நிவாரண உதவிகள் எகிப்து வழியாக காசாவிற்குள் அனுப்பப்பட்டது. இருப்பினும், போர் தொடர்ந்து வந்ததாலும், நிவாரண பொருட்களை அனுப்ப எகிப்து கட்டுப்பாடுகளை விதித்ததாலும், தேவையான அளவிற்கான நிவாரண பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது இந்த போர் நிறுத்தம், காசாவிற்கு தேவையான நிவாரண பொருட்களை கொண்டு செல்ல உதவும் எனக் கூறப்படுகிறது.
போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் கத்தார்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தாக மத்தியஸ்தம் செய்த கத்தார், போர் நிறுத்த மீறல்கள் குறித்து கண்காணிக்க உள்ளது. கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள செயல்பாட்டு அறையில் இருந்து, காசாவில் நடக்கும் விவகாரங்கள் குறித்த நேரடி தகவல்களை அந்நாடு பெற்றுக் கொள்ளும். போர் நிறுத்தத்தில் ஏதேனும் விதிமீறல் இருந்தால், அதனை உடனடியாக சரி செய்து போர் நிறுத்தத்தை நான்கு நாட்கள் தொடர்வதற்காக, கத்தார் அரசு கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.