பள்ளிகளை முற்றுகையிட்ட மாணவர்கள்! பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டம்; 1,900 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டில் புதிய கல்வியாண்டு தொடங்கிய சில வாரங்களிலேயே, பள்ளிகளில் நிலவும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், நீண்ட நேர பாடத்திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக சேர்க்கை முறைகளுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளது. பாரிஸ் நகரில் தொடங்கிய இந்த போராட்டம், தற்போது நாட்டின் சிறிய நகரங்களுக்கும் வேகமாக பரவி, 560-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் செயல்பாடுகளை முடக்கியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
1,900 பேர் கைது
காவல்துறை அதிரடி நடவடிக்கை
மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருவதால் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைப்பது, காவல்துறையினர் மீது பட்டாசுகள் மற்றும் ரசாயனங்களை வீசுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.
வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,900-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 305 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே போராட்டத்தின் தாக்கம் பக்கத்து நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது.
கோரிக்கைகள்
நிதி ஒதுக்கீடும் மாணவர்களின் கோரிக்கைகளும்
இம்முறை கல்வித் துறைக்காக பிரான்ஸ் அரசு 65.5 பில்லியன் யூரோக்களை ($74 பில்லியன்) வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ள நிலையிலும் இப்போராட்டம் வெடித்துள்ளது.
வகுப்பறைகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள், காலை 8 மணிக்கே தொடங்கும் கடினமான வகுப்புகள் மற்றும் சிக்கலான பல்கலைக்கழக சேர்க்கை முறை ஆகியவற்றைக் கண்டித்தே தாங்கள் போராடுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
PISA அமைப்பின் ஆய்வறிக்கையின் படி பிரான்ஸ் நாட்டின் கல்வித் தரம் சரிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல்
அதிபர் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் வன்முறை
பிரான்ஸில் வரவிருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டு இப்போராட்டம் மிகப்பெரிய அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தீவிர இடதுசாரி வேட்பாளரான ழீன்-லுக் மெலன்சோன் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, காவல்துறையின் நடவடிக்கையைக் "டிராக்கோனியக் கொடூரம்" எனக் கடுமையாக சாடியுள்ளார்.
அதேவேளையில், வலதுசாரித் தலைவரான மரைன் லீ பென் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் இமானுவேல் மேக்ரான் வன்முறையைக் கண்டித்துள்ளதோடு, இளைஞர்களை அரசியல் ரீதியாக திசைதிருப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.