இஸ்லாமிய தாக்குதல்: 7000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துகிறது பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் நேற்று நடந்த இஸ்லாமிய தாக்குதலில் ஒரு ஆசிரியர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, கூடுதலாக 7,000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார். வடக்கு பிரான்சில் உள்ள அராஸ் நகரில் இருக்கும் பள்ளி ஒன்றில் 20 வயது இளைஞர் ஒருவர் நேற்று தாக்குதல் நடத்தினார். அந்த தாக்குதலில் ஒரு ஆசிரியர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதோடு, இருவர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, நேற்று பிரான்சில் மிக உயர்ந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், முக்கிய நகர மையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொள்ள திங்கள்கிழமை மாலைக்குள் 7000 வீரர்கள் அணிதிரட்டப்படுவார்கள் என்று மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போருடன் தொடர்புடைய தாக்குதல்
பிரான்சில் ரக்பி உலகக் கோப்பை நடந்து வருகிறது. இன்று மாலை தென்னாப்பிரிக்காவை காலிறுதியில் எதிர்கொள்ள பிரான்ஸ் தயாராகி கொண்டிருக்கும் நிலையில், இந்த உயர்மட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தொடர்ச்சியான இஸ்லாமிய தாக்குதல்களால் பிரான்ஸ் குறிவைக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 2015இல் பாரிஸில் உள்ள பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் கஃபேக்கள் மீது துப்பாக்கி ஏந்தியவர்களும் தற்கொலை குண்டுதாரிகளும் ஒரே நேரத்தில் நடத்திய தாக்குதல்தான் சமீப காலத்தில் பிரான்சில் நடந்ததிலேயே மிக மோசமான தாக்குதலாகும். இந்நிலையில், நேற்று பிரான்சில் நடந்த இஸ்லாமிய தாக்குதல், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போருடன் தொடர்புடையது என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மானின் தெரிவித்துள்ளார்.