யூடியூப் முன்னாள் CEOவின் மகன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்பு
செய்தி முன்னோட்டம்
யூடியூப்பின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கியின் மகனான மார்கோ ட்ரோப்பர்(19), செவ்வாய்கிழமை(பிப்ரவரி 13) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருக்கும் தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
UC பெர்க்லி வளாகத்தில் உள்ள கிளார்க் கெர் விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவர் அழைப்புகளுக்கு எதற்கும் பதிலளிக்கவில்லை என்ற புகார் எழுந்ததை அடுத்து, மார்கோ ட்ரோப்பர் உயிரிழந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அவரது உயிரைக் காப்பாற்ற பெர்க்லி தீயணைப்புத் துறையின் முயற்சித்த போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
ட்ரோப்பரின் மரணத்திற்கான சரியான காரணம் தற்போது தெரியவில்லை என்றாலும், இந்த வழக்கில் எந்தவிதமான முறைகேடு நடந்ததற்கான அறிகுறிகளும் இல்லை என்று வளாக காவல்துறை கூறியுள்ளது.
அமெரிக்கா
போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதால் அவர் உயிரிழந்தாரா?
இருப்பினும், ட்ரோப்பரின் பாட்டி, எஸ்தர் வோஜ்சிக்கி, போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதால் தனது பேரன் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்.
"அவன் ஒரு மருந்தை தொடர்ந்துபயன்படுத்தி கொண்டிருந்தான். அதில் என்ன இருந்தது என்று எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அது ஒரு போதைப்பொருள் என்பது மட்டும் தான்" என்று எஸ்தர் கூறியுள்ளார்.
UC பெர்க்லியில் கணிதம் பயின்று வந்த மார்கோ ட்ரோப்பர், இரண்டாவது செமஸ்டரை சமீபத்தில் தான் தொடங்கினார்.
2014 முதல் 2023 வரை யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த வோஜ்சிக்கிக்கு அவரது கணவர் டென்னிஸ் ட்ரோப்பருடன் மேலும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.